புதுமைப்பித்தன் நமக்குக் காட்டிய ஜோசப் ஸ்டாலின்

புதுமைப்பித்தன்

 - கால சுப்ரமணியம்

நவீன தமிழ்ச் சிறுகதை இலக்கிய மேதையான புதுமைப்பித்தன் (1906-48), ‘ஸ்டாலினுக்குத் தெரியும்’ என்ற சீரிய உலக அரசியல் விமர்சன நூலை எழுதியுள்ளார். இதை 1942-43 வாக்கில், இரண்டாம் உலகப் போர்க் காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதியிருக்கலாம் என்றாலும், இது 1991இல் தான் க.ரத்னம் என்ற (கொங்குநாட்டு நாவலாசிரியர்; பறவையியலாளர்; எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற மிக முக்கியமான பெருந்தொகுப்பு நூலை மொழிபெயர்த்தவர்) எழுத்தாளரால் சென்னை, ஐந்திணை பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்டது. சுமார் 90 பக்கங்கள் கொண்ட இந்நூலின் கையெழுத்துப்படி மட்டும்தான் இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய புதுமைப்பித்தனின் அரிதான ஒரே கையெழுத்துப் பிரதி. அந்தக் கையெழுத்துப்படியின் படப்பிரதி வடிவத்தைத் தான் நீங்கள் இத்தளத்தில் பார்க்கிறீர்கள்.

ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ என்ற ஆங்கிலேய நாவல் மூலம்தான் ‘Big Brother is watching You’ என்ற வாசகம் பிரபலமானது. ஆனால், ஸ்டாலினிசத்தை விமர்சித்த அந்த நாவல் 1949இல் தான் வெளிவந்தது. அதைத் தமிழில் புதுமைப்பித்தன் பள்ளியைச் சார்ந்த க.நா.சுப்ரமணியம், மொழிபெயர்த்துக் கொண்டுவந்தார். (முத்தண்ணா என்றே 1956இல் முதல் பதிப்பு வெளிவந்தது. அடுத்த பதிப்புகளிலேயே அது ‘1984’ என்று மாற்றப்பட்டது.) புதுமைப்பித்தன் 1943இலேயே ‘நீங்கள் என்ன செய்தாலும் எல்லாமே ஸ்டாலினுக்குத் தெரியும்’ என்ற பொருளுள்ள இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார் என்பது அவரது விமர்சனத் தீர்க்க தரிசனத்தைக் காட்டுகிறது.

புதுமைப்பித்தனியலுக்கு அரிய பணிகளை ஆற்றியவர், அவரது சீடரைப் போன்ற தொ.மு.சி. ரகுநாதன். புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் அவர். புதுமைப்பித்தனது வாழ்நாளில் வெளியான நூல்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் பத்திரிகைகளில் வெளிவந்து நூலுருப் பெறாமல் இருந்தவற்றையும் திரட்டி 1953 வாக்கில் ஸ்டார் பிரசுரம் மூலம் பதிப்பித்தவரும் ரகுநாதனே. அத்துடன் புதுமைப்பித்தனை விமர்சித்தவர்களையும் அவர் மீதான விஷமத்தனங்களையும் தோலுரித்துக் காட்டி எழுதியவரும் அவர்தான். அவர் ஸ்டாலினிச ஆதரவாளராக இருந்ததே, ஸ்டாலினுக்குத் தெரியும் என்ற ஸ்டாலினை விமர்சிக்கும் நூல் வெளியாகாமல் இருந்ததற்குக் காரணமோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.

புதுமைப்பித்தன் எந்தக் கொள்கைக்குள்ளும் அடங்காதவர். அவர் நாத்திகவாதியோ அவநம்பிக்கைவாதியோ மரபுவாதியோ அல்ல. ஆனால் பகுத்தறிவு, முற்போக்கு, ஜனநாயகம், சமத்துவம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர். தமிழில் நவீனக் கவிதையில் பாரதியைப் போல், உரைநடையில் - குறிப்பாகச் சிறுகதையில் - புதுமைப்பித்தனையே ஆதர்சமாகக் கொள்ள முடியும். தமிழில் புதுக்கவிதை மலராத காலத்தில் சில நவீன கவிதைகளைப் படைத்துள்ளார். விமர்சனம் வளராத காலத்தில் சிறந்த விமர்சனத் தொடக்கங்களைக் காட்டியிருக்கிறார். அவரது கட்டுரைப் படைப்புகளில் நூல்களாக எழுந்த அதிகாரம் யாருக்கு? (1944), பாஸிஸ்ட் ஜடாமுனி (1939), கப்சிப் தர்பார் (1939) ஆகியவை பாசிச, நாசிச, சர்வாதிகாரப் போக்குகளை இனம் காட்டியுள்ளன. இவை வெறும் பத்திரிகைச் செய்திகளிலிருந்து திரட்டிக்கொண்டவை அல்ல. ஆழ்ந்த படிப்பிலும் அலசி ஆராய்ந்த விமர்சன நோக்கிலிருந்தும் பிறந்தவை. முதலாளித்துவத்தின் சீரழிவையும் மிஷின் யுகத்தின் விளைவுகளான பாசிசத்தைக் கடுமையாகக் காய்ந்து, பொதுவுடைமையின் சாதக அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறார். ஸ்டாலினின் ஆரம்பத்தையும் சாதகமாகவும் நிதானமாகவுமே விமர்சிக்கிறார். இந்த அரசியல் நூல்கள் அவரது இளமையில் எழுதப்பட்டவை.

1950 வாக்கில் ஸ்டாலினிசம் உலக எழுத்தாளர்களிடையே, அவர் மீதும் கம்யூனிச ஆட்சிமுறை மீதுமான மறுதலிப்பு பகிரங்கப்படக் காரணமாகியிருந்தது. The God That Failed (1949) என்ற பிரபலமான நூல், லூயிஸ் பிஷர், ஆண்ட்ரே ழீட், ஆர்தர் கோஸ்ட்லர், இக்னாசியோ சிலோன், ஸ்டீபன் ஸ்பெண்டர், ரிச்சர்ட் ரைட் ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஆறு கட்டுரைகளின் தொகுப்பு, ஸ்டாலினிசக் கம்யூனிசத்தின் மீதான ஏமாற்றத்தையும் அதைக் கைவிடுவதையும் பகிரங்கப்படுத்தியது. எழுத்தாளர்கள்-கலைஞர்களுக்கான The Congress for Cultural Freedom (CCF) மேற்கு ஜெர்மனியில் 1950இல் நிறுவப்பட்டு, அதன் கிளைகள் 37 நாடுகளில் செயல்பட்டன.

தமிழ்நாட்டில் கூட, சுந்தரராமசாமி போன்ற எழுத்தாளர்கள் கட்சியையும் கம்யூனிசத்தையும் விட்டு வெளியேறினார்கள். அரசியலற்ற அழகியல்வாதியான க.நா.சுப்ரமணியம் கூட, கலாச்சார சுதந்திரக் காங்கிரஸ் குழுவில் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் ரஷ்யாவில் சோவியத் ஆட்சி நீங்கி, தமிழும் பின் நவீனத்துவம் வலிமை பெற்ற பின்தான் ரகுநாதன், சிவத்தம்பி போன்றவர்கள் இந்த வழிக்கு மாறினார்கள் எனலாம். எனவே ஸ்டாலினுக்குத் தெரியும் என்ற புதுமைப்பித்தனின் நூல் பிரசுரம் பெற வாய்ப்பில்லாமலே இருந்ததில் ஆச்சரியமில்லை.

ஐந்திணை பதிப்பகம் கண. இராமநாதனோடு நெருங்கியிருந்தவரும், பழைய புத்தகங்களைச் சேகரிப்பதில் ஈடுபாடும், புதுமைப்பித்தனின் மேல் பற்றும் கொண்டிருந்த நாவலாசிரியர் க. ரத்னம், புதுமைப்பித்தன் வெளியீட்டாளரான அவரிடம் நயமாகப் பேசி, இன்று மீந்து நின்றுவிட்ட புதுமைப்பித்தனின் ஒரே ஒரு கையெழுத்துப் பிரதியைக் தம் கைவசப்படுத்தினார். 

ரத்னத்திடம் ஸ்டாலினுக்குத் தெரியும் கையெழுத்துப் பிரதி இருந்தது. அதைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். நான் அதை எப்படியாவது அப்படியே ஒரு படப்பிரதி அச்சுப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து, பாண்டிச்சேரி பிரெஞ்சு நூலக நண்பர் கண்ணனிடம் சொல்லி, அந்தக் கையெழுத்துப் பிரதிகளை பிரெஞ்சு நூலகம் கணிசமான தொகை கொடுத்துப் பெறும்படி சொன்னேன். அதற்குப் பிரதியாக அந்தக் கையெழுத்துப் படியின் பக்கங்களை அப்படியே அச்சிடுவதற்கேற்ப போட்டோ படப் பிரதிகளாகத் தரும்படி செய்தேன். அந்தப் படப் பிரதியைத்தான் நீங்கள் இப்போது தமிழ் மின் நூலக டிஜிடல் வடிவப் புத்தகமாகப் பார்க்கிறீர்கள். இதற்குத் துணை நின்ற நூலகத் துணையாளர் நண்பர் சித்தானை அவர்களுக்கு நன்றி.

 

(கால சுப்ரமணியம்: கவிஞர், ’லயம்’ இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.)


 

கையெழுத்துப் படி... 

  • Share this theme
  • instagram
  • facebook
  • linkedin
  • twitter

Uploaded By

Tamil virtual academy